கலாவிநோதன் சின்னமணி வில்லுப்பாட்டு


 கலாவிநோதன் சின்னமணி வில்லுப் பாட்டு 



ஊரில் இருந்த காலங்களில கோவில் திருவிழாக்களில கடைசிநாள் பூங்காவனம். பெரும் பாலும் இந்தத்திருவிழா ஊரின்ர இளைஞர்களாலதான் நடத்தப்படும்.. 


வழமையான மகோற்சவ விழாக்கள் எல்லாம் முடிஞ்சு  கடைசி நாள் அண்டு பூங்காவனம்... திருவிழா அண்டு விடியவில இரூந்து  கோயிலைச் சுத்தி இருக்கிற ஏரியாவே களைகட்டும்... கோயில் மூலையில பெரிய ஜெனரேட்டர் வந்திறங்கும்...இந்த ஜெனரேட்டர்களுகள் ஒரு சின்ன மாட்டு வண்டிலில பூட்டியிருக்கும் ...


கோயிலுக்கு முன்னால நல்ல பெரிய மேடை போட்டு சோடிக்கப்படும்... அந்த மேடைக்கு பின்னாலதான்  ஒரு வாங்கைப் போட்டு லவுட்ஸ்பீகர் தம்பி தன்ர செற்றிங் எல்லாம் செய்வார்....


கோயில் வீதியெல்லாம் பச்சை சிவப்பு வெள்ளை எண்டு ரியூப் லைட்டுகள் கட்டுப்படும்... ஒரு பக்கத்தில் கச்சான் கடை தும்பு மிட்டாஸ் கலர்பப்படம் சர்பத் கொண்டு பலதரப்பட்ட கடையள் முளைக்கும்... இப்பிடியே டெக்கரேசன் எல்லாம் முடிய பின்னேரம் ஆறுமணியாகும்...அந்த நேரத்தில ஜெனரேட்டர் போட்டு கோயிலும் வீதியும் சும்மா ஜெகஜோதியா ஒளிக்கும்...


பின்னேரப்பூசை முடிஞ்ச உடனே விழா தொடங்கும் இதில குறிப்பா 


மேளக் கச்சேரி   முதல்ல கோயில் ஆஸ்தான குறூப் அதைதொடர்ந்து பெரிய வித்துவான்களின்ர கச்சேரி நடக்கும்....



அதை தொடர்ந்து  ஒரு பத்து மணியளவில வில்லுப்பாட்டு கச்சேரி... ஈழத்தில நான் அறிஞ்ச வரையில ரெண்டு குறூப் இருந்தது ஒண்டு சின்னமணி குறூப் மற்றது ஸ்ரீதேவி குறூப்... 



இதில ஸ்ரீதேவி குறூப்பில லீடர் ஒரு ஜயர். அவற்றை நளினபாவங்களுக்கே ஒரு பெரிய பெண் ரசிகைகள் இரூந்தவை....



அடுத்தவர்  சின்னமணி ....இவருக்கு எண்டு ஈழம் முழுக்க ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது எண்டு சொல்லலாம்... இவர் மேடையில வந்து இருந்து தனத்தோமென்று 



சொலலியே... வில்லினில் பாட..' என்று ஆரம்பித்து 'சபையிலுள்ள பெரியோரே தாய்மாரே.. அப்பு மாரே ஆச்சிமாரே குஞ்சுகளே குருமான்களே' எண்டு   தொடங்கினால் ஒரு ரெண்டு மூண்டு மணித்தியலத்துக்கு சிரிச்சுக் கொண்டே இருக்கலாம்... இவரின்  சந்தியவான் சாவித்திரி கதை அலுக்காமல்   கேட்டுக்கொண்டு இருக்கலாம்... 


அவற்றை  classic  joke 



கோவலன் கள்வன் என்று கேள்விப்பட்ட கண்ணகி ஓடினாள் என்று சின்னமணி ஐயா கூற....பக்கத்திலிருந்தவர் எங்கே ஓடினாள் என்று கேட்க, வீதியில் தலைமுடியை விரித்தபடி ஓடினாள்!

 

என்ன வீதியில் ஓடினாள்?

 

மதுரைத் தெருக்களெல்லாம் ஓடினாள்!

 

அரண்மனை வீதிகளின் ஓடினாள்!

 

வயல் வெளிகளில் ஓடினாள்!

 

காடு கரம்பையெல்லாம் ஓடினாள்!

 

அப்போதும் பக்கத்தில் இருந்தவர் விடவில்லை!

 

வேறு எங்கெல்லாம் ஓடினாள்?

 

அப்போது சின்ன மணி ஐயா...... மதுரையை எரித்து... இங்கே.. வந்து அமரும் வரை... ஓடிக்கொண்டே இருந்தாள் என்று போட்டாரே ஒரு போடு!

 

இப்படியே அவர்.கதை சொல்லும் விதமே தனி.. 

சின்னமணி அவர்கள் ஈழத்தின் ஒப்பற்ற மகா கலைஞன்... வில்லுப் பாட்டு என்ற கலையை உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்ற ஒரு அற்புதமான கலைஞர்... 

அவர் மறைந்த தினம்  04 /02/2015

 இருக்கும் வரை கலையால் மகிழ்வித்த அந்த மகா கலைஞன் ஆத்மா சாந்தியடையட்டும்

கருத்துகள்