90 களில் யாழ்ப்பாண வாழ்க்கை


 80 90 களில் நாங்கள் ரசித்த சைக்கிளில் ரவுண் அடிச்ச யாழ்ப்பாணம்.


நாங்கள் வளர்ந்த காலகட்டத்தில தான் யாழ்ப்பாணத்தில் சண்டை அமர்க்களமாக நடந்து கொண்டிருந்த காலகட்டம்.... நாங்களும் எங்கட primary school முடிஞ்சுது secondary school க்குள்ள கால் வைச்ச நேரம்... நாங்களும் தனிய சைக்கிள்ள பள்ளிக்கூடம் ரியூசன் எண்டு திரிய ஆரம்பிச்சு யாழ்ப்பாணத்தை எக்ஸ்புளோர் பண்ண தொடங்கின காலகட்டம் ....  

 என்னவோ புலம்பெயர்ந்து எத்தினை ஊர்களுக்கும் நாடுகளுக்கும் போனாலும் அந்த   ஹீரோ சைக்கிளையும்  அதில ஊர் சுத்தின வாழ்க்கையும் மனம்  மீண்டும் மீண்டும் ஏங்கும் ... அந்த செல்லடிக்கையும்,  பொம்பர் குண்டடிக்கையும்  யாழ்ப்பாணத்தை  சுத்தின வாழ்க்கை மீண்டும் வராது... நவீன யாழ்ப்பாணமும் கார்களும் வீடுகளும் கடைகளும் அந்தக்கால யாழ்ப்பாணத்தை ஒரு நாளும் ஈடாக்காது....  குறிப்பாக தாவடி,  கொக்குவில்ல இருந்தவைக்கு கொக்குவில் சந்தி குளப்பிட்டிச் சந்திதான் M25   Junction 1 உம் Junction 2 உம் போல அப்பிடியே கே கே எஸ் ரோட்டில ஏறி சைக்கிளை மிதிச்சா நேர பூ நாறி மரத்தடி சந்தி தாண்டிப் போனா நாச்சிமார் கோவிலடி அதில இறங்கி ஒருக்கா கும்பிட்டுட்டு அப்பிடியே சைக்கிளை மிதிச்சா பழைய வண்ணார்பண்ணை, அப்பிடியே போய்  யாழ்ப்பாணம் சிவன் கோயில் வாசலில ஒரு கும்பிடு பிறகு தாமோதர விலாசில போனால் சூடா ஒரு ரீயும் வடையும் சாப்பிடலாம்  அல்லது நல்ல முறுகின மசாலத் தோசையோ நெய்த்தோசசையோ...சாப்பிட்டு சைக்கிளை மிதிச்சா நேர கன்னாதிட்டி லேன் பிறகு கொஸ்பிரல் ரோட் அதுக்குள்ள போனால் பஸ்ராண்ட்  அதுக்கு பூபாலசிங்கம் புத்தகசாலை  (குறிப்பா 80 90 களில் யாழ்ப்பாணத்தில இரண்டு மிகப் பெரிய பொழுது போக்கு வாசிப்பு மற்றது கிறிக்கெற்) முன்னால சைக்கிள ஸ்ராண்டில விட்டுட்டுட்டு முன்னுக்கு நிண்டு அந்த புத்தகங்களை வேண்டுறமோ இல்லையோ அதில நிண்டு புதுப்புது புத்தகங்களை பிரட்டுறதில ஒரு அலாதி இன்பம்... குறிப்பா இன்டியா ருடே , ஸ்போர்ட்ஸ்ரார் மகசின் எண்டா மணித்தியாலக் கணக்கில நிப்பம்......  பஸ்ராண்ட்க்கு நடுவில மணிக்குரல் விளம்பரம், சீமாட்டி ஜவுளி மாளிகைக்கும்  ஹப்பி ரெக்ஸ்ரைலுக்கும் எக்கோ சவுண்டில காற்றில் மிதக்கும்... நடுவில வைரமாளிகை அட்வேர்டுக்கு ஒரு ஜயா  பிளாக் சூட் போட்டு குறுக்க வைரமாளிகை பனர் ஒண்டு போட்டுகொண்டு நடந்து திரிவார்...

அப்பிடியே நேர போனால் கச்சேரி ரோட்டில மிதக்கும்  அதில  OLD PARK ரோட்டுக்குப் போய் சென் ஜோணஸ் அடியால திரும்பி போனா 4ம் குறுக்குத் தெருவுக்கு முன்னால எண்டு நினைக்கிறேன், திருமறைக் கலாமன்றம் தாண்டி அப்படியே முதலாம் குறுக்குத் தெரு தாண்டிப் போனால்  அந்த நேரத்தில உடைஞ்ச ஸ்ரேடியம் , அங்கால கோட்டை முனியப்பர். முந்தி வெளில நிண்டு பார்த்த தூபிக்கு  இருக்கிறது  மட்டும்தான் தெரியும்...அந்த நேரத்தில.... .பிறகு 90 ல கோட்டை பிடிபட்டாப் பிறகு வீட்ட சொல்லாமல் போய் பார்த்து,  ஆமிக்காரன் பின் வழியால ஓடின இடமெல்லாம் பார்த்தது இப்பவும் ஞாபகம் இருக்கு..அதெல்லாம் முடிஞ்சு  அப்பிடியே நேர போனால்  பண்ணைப் பாலம் அந்த நேரத்தில அங்கால போகேலாது... பிறகு திரும்பி வந்த வழியால  அடிச்சு கொண்டு நேர ......

அப்பிடியே உடைஞ்ச கோட்டையை பார்த்துட்டு நேர கொஸ்பிரல் ரோட் தாண்டி வந்தா ஸ்ரான்லி ரோட் ஆரியகுளம் சந்தி.  அதில தான் ஸ்ரீதர் தியேட்டர் இருந்தது.  90 களில இயக்கத்தின்ர படங்கள் எல்லாம் அங்கதான் ஓடும்.சிறீதர் தியேட்டரைத் திருத்தி விடுதலைப் புலிகள் ஜெனறேற்றர் மூலம் போர் சம்பந்தப்பட்ட ஆங்கிலப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து போட்டார்கள். எம்.ஜி ஆரின் படங்களும் வருவதுண்டு.  குறிப்பா வெட்டிபண் கொத்தி ஒட்டின புருஸ்லீன்ர படங்கள் எல்லாம் அங்க ஓடும் ...பிறகு அது ஈபிடிபியால அபகரிக்கப் பட்டு இப்பவும் அவைதான் இருக்கினம்....  ஆரியகுளம் சந்தில இருந்து தொடங்கினா ஆர்ட்ஸ் படிக்கிற பிள்ளையள், நியூ மாஸ்டர்ஸ் இன்ஸ்ரிரியூட் இல்

மத்ஸ் படிக்கிறவை, இங்கால நியூ விக்டேர்ஸ் பக்கம் சயன்ஸ் படிக்கிற வேம்படி, லேடீஸ் கொலிஜ், ‪சுண்டுக்குளி, கொன்வென்ற்‬ பிள்ளையள் என்று எல்லாரையும் கவர் பண்ணி ஒரு மாதிரி  நேர பிரவுண் ரோட்டால போனா சத்தீஸ் மாஸ்ரின்ர கெமிஸ்ரி பிள்ளையளையும் அப்பிடியே வழியனுப்பி பிரம்படிக்கை இறங்கி மணி   ரியூசன் தாண்டி, போய் வீட்ட   இறங்குவம்.  இதுக்குள்ள நல்லூர் திருவிழா தொடங்கினா  அந்த 25 நாளும் காலம்பறவே ஒழும்பி குளிச்சு முழுகி அப்பிடியே போய் நல்லூர் வீதில பிரதட்டை அடிச்சுட்டு வந்து அந்த மணலுக்க இருந்து தர்ற கோப்பியை குடிக்கிற சுகமே தனி.... பின்னேரங்களில வெளிக்கிட்டு நல்லூர் திரூவிழாவுக்கு போய் வெளி வீதில நிண்டு சுவாமியை பார்த்துட்டு ( உண்மையில நல்லூரில சுவாமி காவுற அழகே அழகு... அப்படி ஒரு மென்மையாக மூன்று வாகனங்களிலும் முருகன் வள்ளி தெய்வானையை ஒரே அளவில் எப்படித்தான் காவுகிறார்களோ தெரியாது... இதற்கிடையில்  அளெவெட்டி பத்மநாதனின் நாதஸ்வர கச்சேரி விண்ணை முட்டும்)....    

அங்கால போனால் நல்லை ஆதீனத்தில் சங்கீதக் கச்சேரிகள் களைகட்டும்  குறிப்பா பொன் சுந்தரலிங்கம், போல் திலகநாயகம், மிருதங்கம் கண்ணதாசன்,  வயலின் கோபிதாஸ் முக்கியமானவர்கள்... அப்பிடியே கந்தன் கருணை தாண்டி நேர போனா கம்பன் கழகத்தில கூட்டம் நிரம்பி வழியும் அதில  ஆறு திரு முருகன்,ஜெயராஜ் போன்றவையின்ர பட்டிமன்றம் கலக்கும்...இப்பிடி 90களில்  யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை

..

கருத்துகள்